தேடு

திங்கள், 14 நவம்பர், 2016

காரியத்தில் இறங்குங்கள்

மீபகாலங்களாக சாலை விபத்துகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. ஒவ்வொரு விபத்திலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகமான சாலைவிபத்துகள் ஏற்படுகிறது. இதில் அதிகளவு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. 2015–ம் ஆண்டில் இந்தியாவில் 5 லட்சத்து ஆயிரத்து 23 விபத்துகள் நடந்திருக்கின்றன. இந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதிலும் 1 லட்சத்து 46 ஆயிரத்து 133 ஆகும். 5 லட்சத்து 279 பேர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் நடந்த விபத்துகளிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு விபத்துகள் நடந்துள்ளன. 2015–ம் ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 69 ஆயிரத்து 59 விபத்துகள் நடந்திருக்கின்றன. இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 642 ஆகும். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 725 ஆகும். இந்த ஆண்டு மார்ச் மாதம்வரை மொத்தம் 18 ஆயிரத்து 571 சாலைவிபத்துகள் நடந்துள்ளன. இதில், 4 ஆயிரத்து 399 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் கணக்கிட்டால், கடந்த ஆண்டைவிட நிச்சயமாக குறையப்போவதில்லை. பொதுவாக விபத்துகளெல்லாம் சில குறிப்பிட்ட இடங்களில்தான் அதிகமாக நடைபெறுகிறது என்றவகையில், அந்த இடங்களை ‘கருப்பு இடங்கள்’ என்று நெடுஞ்சாலைத்துறையினர் குறிப்பிடுவது வழக்கம். இந்தியா முழுவதிலும் 726 கருப்பு இடங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்நாட்டில்தான் ‘‘100 கருப்பு இடங்கள்’’ உள்ளன. தமிழ்நாட்டில் நடக்கும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்த 100 இடங்களில் தான் ஆண்டுதோறும் 1,300 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மொத்தமுள்ள 726 கருப்பு இடங்களிலும் ஏற்படும் விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாலை வடிவமைப்பு சரியாக இல்லாமலிருப்பது, பொறியியல் திட்டமிடுதல் குறைபாடு, தேவையான அளவு சுரங்கப்பாதைகளோ, மேம்பாலங்களோ இல்லாமலிருப்பது, போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமை மற்றும் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு இல்லாமல் இருப்பது என பல்வேறு குறைபாடுகள் கூறப்படுகின்றன. இந்த குறைபாடுகளையெல்லாம் போக்குவதற்கு, 5 ஆண்டுகளில் 726 கருப்பு இடங்களிலும், ரூ.11 ஆயிரம் கோடி செலவிலான திட்டங்கள் தீட்டப்படும். அதில் குறிப்பாக, சாலை வடிவமைப்புகளை சரிபடுத்த ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், ஏற்கனவே மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. அதிக விபத்துகள் நடக்கும் இடம் தமிழ்நாட்டில் தான் என்றவகையில், இந்த ஒதுக்கீட்டில் கணிசமான தொகை தமிழ்நாட்டிற்குத்தான் ஒதுக்கப்படவேண்டும். 

ஆனால், ஒதுக்கீடுசெய்யும் தொகையை உரியமுறையில் பெறுவதற்கு மத்திய–மாநில நெடுஞ்சாலைத்துறைகள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையே இங்கும், அங்குமாக ‘பைல்கள்தான்’ சென்று கொண்டிருக்கிறதேதவிர, பணம்பெறும் நடவடிக்கைகளிலோ, திட்டங்களை செயல்படுத்துவதிலோ போதிய வேகமில்லை. தமிழ்நாட்டில் விபத்துகளை ஏற்படுத்தும் 100 கருப்பு இடங்களில், 77 இடங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. 17 இடங்கள் மாநில நெடுஞ்சாலையில் இருக்கிறது. மீதமுள்ள 6 இடங்கள் யாருடைய எல்லையின்கீழ் வருகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்தநிலையில், இந்த 100 கருப்பு இடங்களிலும் உள்ள குறைபாடுகளை போக்க ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் இந்த நிர்வாக வேகமின்மை காரணமாக பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கவேண்டுமென்றால், உடனடியாக மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமும், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் ஒருங்கிணைந்து உடனடியாக இந்த 100 கருப்பு இடங்களிலுள்ள குறைபாடுகளை களைவதற்கான திட்டங்கள் தீட்டுவதிலும், பணிகளை தொடங்குவதிலும் வேகம் காட்ட வேண்டும். இவர்கள் காரியத்தில் இறங்குவதில் காட்டும் வேகத்தில்தான் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். அதேபோல், உயிரிழப்புகள், காயமடைபவர்கள் எண்ணிக்கையும் குறையும்.

கருத்துகள் இல்லை: