தேடு

திங்கள், 14 நவம்பர், 2016

மரபுசாரா மின் உற்பத்தி நிலையங்கள்

Thanks thanthi.


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவிலுள்ள செங்கற்படை என்ற கிராமத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனமான அதானி நிறுவனம் 648 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிலையத்தை அமைத்துள்ளது. உலகிலேயே ஒரேஇடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சூரியசக்தி மின்உற்பத்தி நிலையம் இதுவாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே 1,143.42 மெகாவாட் சூரிய மின்சக்தி நிறுவுதிறன் இருக்கிறது. மேலும், 5 ஆயிரம் மெகாவாட் வருகிற 5 ஆண்டுகளில் கூடுதலாக நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு மட்டும் 1,200 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதற்கு ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடிவரை முதலீடு தேவை.

இந்தநிலையில், தனியார் நிறுவனங்கள் நிறையமுதலீடு செய்தால்தான், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இன்னும் ஏராளமாக தொடங்கமுடியும். அதற்கு ஏற்றவகையில், சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கவேண்டும். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கமுடியும். தமிழக இளைஞர்கள் ஒன்றுசேர்ந்தோ, அல்லது தனியாகவோ வங்கிக்கடன்களை பெற்று, அதை லாபகரமான முறையில் நடத்த முடியுமா? என்பதையும் முழுமையாக ஆராய்ந்து, அதற்கு சாத்தியம் இருந்தால் வேலையில்லாத இளைஞர்கள் சுயவேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஊக்கமளிக்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், இயற்கை அன்னை ஆறுகளைத்தவிர, மற்ற அனைத்து அருட்கொடைகளையும் தாராளமாக வாரி வழங்கியுள்ளார். சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்க நல்லவாய்ப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது. ஏனெனில், சூரியசக்தி மின்உற்பத்தியை பொறுத்தமட்டில், வெயில் நிச்சயமாகத் தேவை. தமிழ்நாட்டில் வருடத்திற்கு 300 நாட்கள் வெயில் அடிப்பதால் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்களில் கணிசமான அளவு மின்உற்பத்தி செய்ய வாய்ப்பிருக்கிறது. இதுபோல, காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்வதற்கு ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, கயத்தாறு, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் ஆகியபகுதிகளில் அதிகளவில் மின்உற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன. இப்போதைய நிலையில், தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்நிறுவுதிறன் 7,616.155 மெகாவாட் ஆகும். இந்தியா முழுவதிலும் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்நிறுவுதிறனில் 27 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாட்டிலிருந்துதான் வழங்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இன்னும் 1,700 மெகாவாட் அளவிற்கு காற்றாலை மின்சாரநிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சூரியசக்தி, காற்றாலை ஆகிய இரு மின்உற்பத்தி நிலையங்களையும், தனியார் நிறுவனங்கள்தான் ஏராளமான அளவில் தொடங்கிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இவர்கள் உற்பத்திசெய்யும் மின்சாரம் முழுமையும் தமிழ்நாட்டின் மின்பகிர்மானக்கழகம் வாங்கிக்கொள்ளும் வகையில் மின்வழி தடங்கள் பெரிய அளவில் இல்லை. உற்பத்தி இருக்கிறது, ஆனால் அதை வினியோகம் செய்ய வழித்தடம் இல்லை என்றவகையில், வேண்டுமென்றே உற்பத்தியை குறைக்கும்நிலை இருக்கிறது. ஏனெனில், மின்சாரத்தை சேமித்துவைத்துக்கொள்ளமுடியாது. அதிகளவு மரபுசாரா மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டின் தேவைக்குப்போக கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளிமாநிலங்களில் விற்பனைசெய்து வருமானம் ஈட்ட நல்லவாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதற்கு வழித்தடம் இல்லாததால், தமிழ்நாட்டிலிருந்து வெளிமாநிலங்களுக்கு இந்த மின்சாரத்தை வழங்க ஏதுவாக மாநிலங்களுக்கு இடையிலான பசுமை மின்வழி தடத்தினை மத்திய அரசாங்கம் விரைவில் நிறைவேற்றிடவேண்டும். இதுமட்டுமல்லாமல், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு, கொள்முதல்செய்த மின்சாரத்தை உடனுக்குடன் அதற்கான பில்லுக்கு தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் பணம் கொடுப்பதில்லை என்று ஒருகுறை சிறியஅளவில் 5 மெகாவாட் கொண்ட மின்நிலையத்தை வங்கிக்கடன் மூலம் வாங்கி அமைத்தவர்களுக்கு இருக்கிறது. அந்தக்குறையை போக்கும் வகையில், மின்சாரம் வாங்கினால் உடனடியாக பணம் என்றவகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

கருத்துகள் இல்லை: