தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). 

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார். 

அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். 

அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார். 

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. 

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 

1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. 

நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். 

வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். 

"சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். 

ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். 

அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். 

இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. 

அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். 

அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். 

பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி சம்மதம்


லண்டன் சென்ற இந்தியத் தலைவர்களுடன், பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி, இந்திய விவகார மந்திரி பெதிக் லாரன்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர்களுக்கும், முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் ஒற்றுமை ஏற்படுத்த உண்மையாகவே முயன்றனர். பேச்சுவார்த்தை பல நாட்கள் நீடித்தது. 

பேச்சு வார்த்தை நடைபெறும்போதே, லண்டனில் பல கூட்டங்களில் ஜின்னா பேசினார். "பாகிஸ்தான் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசு ஏற்காவிட்டால், இந்தியாவில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். பேச்சுவார்த்தை முடிவில், பிரதமர் ஆட்லி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் பிரகடனம் வருமாறு:- பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி சம்மதம்

"இந்தியாவின் இருபெரும் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையே ஒற்றுமை ஏற்படுத்த நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால், இந்தியாவில் அபாயகரமான சூழ்நிலை உருவாகியிருப்பதை பிரிட்டிஷ் அரசு உணருகிறது. 1948 ஜுன் மாதத்துக்கு முன், இந்தியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து விடுவது என்று, எனது அரசு முடிவு செய்திருக்கிறது. 

அதிகாரத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று பிரிட்டிஷ் அரசு தீர்மானிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை அது சாத்தியமற்றதாகி விட்டால், இப்போதுள்ள மாகாண அரசுகளிடமே அதிகாரத்தை ஒப்படைத்து விடலாமா, அல்லது வேறு ஏதேனும் நல்ல வழி உள்ளதா என்று பிரிட்டிஷ் அரசு ஆலோசிக்கும். 

இதற்கிடையே, இந்தியாவில் இப்போது வைஸ்ராயாக பதவி வகிக்கும் வேவல், இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்படுகிறார். அவருக்குப்பதிலாக, புதிய வைஸ்ராயாக லார்டு மவுண்ட்பேட்டன் நியமிக்கப்படுகிறார். 1947 மார்ச் மாதம் அவர் பதவி ஏற்பார். அவருடைய முக்கிய வேலை, ஆட்சிப் பொறுப்பை இந்தியர்களிடம் நல்ல முறையில் ஒப்படைத்துவிட்டு திரும்புவதுதான்."

இவ்வாறு ஆட்லி அறிவித்தார். 

இதற்கிடையே இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில், ஆட்லி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது சர்ச்சில் பேசுகையில், "இந்தியர்கள் அற்பபதர்கள். அவர்களுக்குப் பயந்து இந்தியாவில் இருந்து வெளியேறுவது இழுக்கு" என்று கூறினார். 

சைமன் கமிஷன் தலைவராக இந்தியாவுக்கு வந்து அவமானப்பட்ட சைமனும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். ஒரு கட்டத்தில், இந்தத் தீர்மானம் நிறைவேறிவிடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், முன்பு இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து, காந்தியடிகளுடன் உடன்பாடு கண்ட நல்லவரான இர்வின் பிரபு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உணர்ச்சிகரமாகவும், ஆணித்தரமாகவும் பேசினார். 

அவருடைய பேச்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இந்தியா மீது அனுதாபம் ஏற்படச் செய்தது. முடிவில் ஓட்டெடுப்பு நடந்தது. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 185 பேரும், எதிராக 337 பேரும் ஓட்டளித்தனர். தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்திய சுதந்திரத்துக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் மறைமுகமாக அங்கீகாரம் அளித்துவிட்டது. அதனால் இந்தியத் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மவுண்ட்பேட்டன் வருகை ஆட்லி அறிவித்தபடி, வைஸ்ராய் வேவல் 1947 மார்ச் 23-ந்தேதி இந்தியாவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு மறுநாள், புதிய வைஸ்ராயாக லார்டு மவுண்ட்பேட்டன் பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் இந்தியத் தலைவர்களை ஒவ்வொருவராகவும், கூட்டாகவும் அழைத்து இந்திய சுதந்திரம் பற்றி அவர்களுடைய ஆலோசனையைக் கேட்டார். 

காந்தியை அழைத்துப் பேசியபோது, "பிரிவினை தவிர நீங்கள் வேறு எதைச்சொன்னாலும் ஏற்கிறேன்" என்று காந்தி தெரிவித்தார். "அப்படியானால், இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது? பிரிவினையைத் தவிர்க்க, தேசப் பிதாவான உங்கள் யோசனை என்ன?"என்று மவுண்ட்பேட்டன் கேட்டார். 

"ஜின்னாவை பிரதமராக்கி அவர் விரும்புகிறவர்களைக் கொண்ட மந்திரிசபை அமைக்கலாம்" என்று காந்தி தெரிவித்தார். இதுபற்றி இந்தியத் தலைவர்களின் கருத்தை மவுண்ட்பேட்டன் கேட்டார். காந்தியின் யோசனைக்கு நேருவும், பட்டேலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகக் காந்தி தன் யோசனையை வாபஸ் பெற்றுக்கொண்டார். 

பிரிவினை ஒன்றே வழி எல்லாத் தலைவர்களுடனும் பேச்சு நடத்தியபிறகு. "இந்தியா சுதந்திரம் அடைவதற்கு, பிரிவினை ஒன்றுதான் வழி" என்ற முடிவுக்கு வந்தார் மவுண்ட்பேட்டன். இதனைத்தொடர்ந்து வல்லபாய் படேலை அழைத்துப் பேசினார். "ஒற்றுமை இல்லாத - பலமற்ற பெரிய இந்தியாவைவிட, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அமையும் சுதந்திர இந்தியா வலுவானதாக இருக்கும்" என்று கூறினார். 

அவருடைய கருத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்த படேல், பிரிவினைக்குச் சம்மதித்தார். அடுத்து நேருவின் நண்பரும், சிறந்த ராஜதந்திரியுமான கிருஷ்ணமேனனை அழைத்துப்பேசினார். "இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்களை சம்மதிக்கச் செய்வதுதான்" என்று ஆணித்தரமாக எடுத்துக்கூறி, கிருஷ்ணமேனனைச் சம்மதிக்கச் செய்தார். 

பிறகு கிருஷ்ணமேனன், நேருவைச் சந்தித்து, வைஸ்ராயுடன் தான் நடத்திய பேச்சுவிவரத்தைத் தெரிவித்தார். "இந்தியாவுக்கு உடனடியாக சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷார் தயாராகி விட்டார்கள். பாகிஸ்தான் கோரிக்கை மட்டும்தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஜின்னாவும், நாமும் ஒன்றுபட்டு வாழ்வது நடக்காத காரியம். பிரிவினைக்குச் சம்மதித்து, இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்" என்று கிருஷ்ணமேனன் கூறினார். 

இதுபற்றி தீவிரமாக யோசித்த நேரு பிரிவினைக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். பிரதமர் நேருவும், படேலும் பிரிவினைக்குச் சம்மதித்துவிட்ட பிறகு, காந்திஜியைச் சந்தித்தார், மவுண்ட்பேட்டன். தலைவர்களுடன் நடத்திய பேச்சு பற்றியும், பிரிவினைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சம்மதித்துவிட்டது பற்றியும் தெரிவித்தார். பிரிவினைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார், காந்தி. 

"என் பிணத்தின் மீதுதான் பிரிவினையை அமுலுக்கு கொண்டு வரமுடியும்" என்றார். அபுல்கலாம் ஆசாத்தும் பிரிவினையை எதிர்த்தார். பிரிவினை பற்றி தலைவர்களிடையே விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, வடநாட்டில் மீண்டும் கலவரம் வெடித்தது. பல நகரங்கள் தீப்பற்றி எரிந்தன. காந்திஜியை நேருவும் மற்ற தலைவர்களும் சந்தித்து, பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிக்கும்படி வேண்டினார்கள். 

முடிவில், "இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்பதே என் லட்சியம். இந்தியா சுதந்திரம் பெறவும், வகுப்புக் கலவரங்களுக்கு முடிவு காணவும் பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதிக்கிறேன்" என்று காந்தி கூறினார். இதன்பின் நேரு, ஜின்னா, சீக்கிய தலைவர் பல்தேவ்சிங் ஆகிய மூவரும் ரேடியோவில் தனித்தனியே பேசினார்கள். 

"தேசப்பிரிவினை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது" என்று அவர்கள் அறிவித்தார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்கு ஏற்பாடு நடக்கிறது என்பதை அறிந்ததும், பஞ்சாபிலும், வங்காளத்திலும் தனி நாடு கோரிக்கை எழுந்தது. "பஞ்சாப் பஞ்சாபியருக்கே", "வங்காளம் வங்காளியருக்கே" என்று குரல் எழுப்பினார்கள். இந்நிலையில், வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் 18-5-1946-ல் லண்டனுக்குச் சென்றார். 

பிரதமர் ஆட்லியுடனும், இந்திய விவகார மந்திரி லாரன்சுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓர் இறுதி முடிவுடன் 31-5-1946-ல் இந்தியா திரும்பினார். மவுண்ட்பேட்டன் தன் திட்டத்தை, இந்தியத் தலைவர்களிடம் தெரிவித்து அவர்களுடைய ஆதரவைக் கோரினார். அந்தத் திட்டம் வருமாறு:- 

(1) 1948 ஜுன் மாதத்துக்குள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று இங்கிலாந்துப் பிரதமர் ஆட்லி முன்பு அறிவித்தார். அது மாற்றப்பட்டு 1947 ஆகஸ்ட் 15-ந்தேதியே சுதந்திரம் தருவதென்று, பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

(2) முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடு அமைக்கப்படும். பஞ்சாப்பைச் சார்ந்த பகுதிகள் மேற்கு பாகிஸ்தானாகவும், வங்காளத்தைச் சேர்ந்த பகுதிகள் கிழக்கு பாகிஸ்தானாகவும் அமையும். 

(3) இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்த அதிகாரங்கள், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மாற்றப்படும். 

- இதுவே, மவுண்ட்பேட்டன் அறிவித்த திட்டம். காந்தி ஒப்புதல் இந்தத் திட்டத்தைக் காந்தியிடம் கொண்டு போய்க்காட்டினார், மவுண்ட்பேட்டன். அப்போது காந்தி, மவுன விரதத்தில் இருந்தார். அதனால், தன்னுடைய ஒப்புதலையும் மகிழ்ச்சியையும் அவர் எழுதிக்காட்டினார். ஜுன் 10-ந்தேதி முஸ்லிம் லீக் பேரவை கூடி, மவுண்ட்பேட்டனின் திட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. 

காங்கிரஸ் கமிட்டி மவுண்ட் பேட்டனின் திட்டம் பற்றி ஆலோசிக்க, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஜுன் 14-ந்தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் காந்திஜி உருக்கமாகப் பேசினார். "இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதற்காகவே பிரிவினைக்குச் சம்மதிக்கிறேன்" என்று கூறினார். விவாதத்தின் முடிவில் ஓட்டெடுப்பு நடந்தது. பிரிவினைக்கு ஆதரவாக நேரு, பட்டேல், கோவிந்த வல்லப பந்த் உள்பட 157 பேரும், எதிர்த்து 29 பேரும் ஓட்டளித்தனர். 

32 பேர் நடுநிலைமை வகித்தனர். கவனர் ஜெனரல் பதவி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கொஞ்ச காலம் மவுண்ட்பேட்டனே கவர்னர் ஜெனரலாக இருப்பதற்கு காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் இசைவு தந்திருந்தன. பிறகு ஜின்னா தன் கருத்தை மாற்றிக்கொண்டு, "சுதந்திர பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக நானே பொறுப்பேற்கப் போகிறேன்" என்று அறிவித்தார். 

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் முன்பு ஒப்புக்கொண்டபடி, மவுண்ட்பேட்டனே சுதந்திர இந்தியக் கவர்னர் ஜெனரலாக இருக்கவேண்டுமெனத் தீர்மானித்தனர். அரசாங்க சொத்தைப் பிரிப்பது, ராணுவத்தைப் பிரிப்பது ஆகிய பணிகளைக் குறித்த நேரத்தில் மவுண்ட்பேட்டன் செய்து முடித்தார். 

பிரதமர் நேருவும், மற்ற மந்திரிகளும் அதற்குத் துணை புரிந்தனர். தேசியக்கொடி அசோகச் சக்கரம் பொறித்த மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்க, இந்திய அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜனகணமன" என்ற பாடல், இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. 

சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள காந்தி மறுப்பு

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி அந்த லட்சியத்தில் வெற்றி பெற மகாத்மா காந்தி, சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? மற்ற நாடுகளில் எல்லாம், அந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள்தான், நாடு சுதந்திரம் பெற்றவுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளனர். 

அமெரிக்காவின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அந்த நாடு சுதந்திரம் பெற்றதும் ஜனாதிபதியானார். அயர்லாந்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய டிவேலரா, அந்த நாடு விடுதலை பெற்றதும் ஜனாதிபதி பதவி ஏற்றார். ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து ரஷியாவை மீட்ட லெனின், அந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார். 

இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடு உதயமானபோது, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பாடுபட்ட ஜின்னா, அந்த நாட்டின் கவர்னர் ஜெனரலாக (ஜனாதிபதிக்கு இணையானபதவி) பொறுப்பேற்றார். ஆனால் மகாத்மா காந்தியோ, இந்தியா விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி, கல்கத்தா வீதிகளில் ஒரு எளிய மனிதராக நடமாடிக்கொண்டிருந்தார்! \

அவர் டெல்லியில் தங்காமல் கல்கத்தா சென்றதற்கு முக்கிய காரணம் இருந்தது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், மீண்டும் வகுப்புக் கலவரங்கள் மூண்டிருந்தன. குறிப்பாக கல்கத்தாவில் கலவரம் பயங்கரமாக இருந்தது. இதுவரை சுதந்திரத்துக்காகப் போராடிய காந்தியடிகள், இனி வகுப்புக் கலவரங்களுக்கு முடிவு கட்டி, அமைதியை நிலைநாட்டுவதே தனது முதல் கடமை என்று கருதினார். 

கலவரப்பகுதிகளில் அமைதி யாத்திரை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் கல்கத்தாவுக்குச் செல்ல முடிவு செய்தார். "சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளுங்கள். பிறகு கல்கத்தாவுக்குப் போகலாம்" என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 

ஆனால், காந்தி மறுத்துவிட்டார். "சுதந்திரச் செய்தி" கூட வெளியிடாமல், கல்கத்தாவுக்குச் சென்றார். கலவரப் பகுதிகளில் நடந்து சென்றார். அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்ட் 15-ந்தேதி நாடெங்கும் சுதந்திரத் திருநாள் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. அன்று கல்கத்தாவில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார்; 

நூல் நூற்றார்; பிரார்த்தனை நடத்தியபின், கல்கத்தா நகரைச் சுற்றிப் பார்த்தார். அமைதி திரும்பிக்கொண்டிருப்பதையும், இந்துக் களும், முஸ்லிம்களும் நேச முறையில் பழகுவதையும் கண்டு மகிழச்சி அடைந்தார். கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் நண்பர் வீட்டில் காந்தி தங்கியிருந்தார். ஆகஸ்ட் 31-ந்தேதி இரவு, சில இளைஞர்கள் வந்து கதவைத் தட்டினர். காந்தி வெளியே வந்தார். 

கோபத்துடன் நின்றுகொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து, வணக்கம் தெரிவித்தார். கூட்டத்திலிருந்து ஒருவன் காந்தியை நோக்கி ஒரு செங்கல்லை வீசினான். ஆனால் அது குறி தவறி, அருகில் நின்று கொண்டிருந்த காந்தியின் நண்பரைத் தாக்கியது. கூட்டத்திலிருந்த ஒரு வாலிபன், தன் கையிலிருந்த தடியை காந்தியை நோக்கி வீசினான். 

காந்தியின் தலையை நோக்கிப் பறந்த அந்தத்தடி, நூலிழையில் குறி தவறியது. இதற்கிடையே போலீசார் அங்கு வந்து, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் (செப்டம்பர் 1) காந்தி ஒரு அறிக்கை விடுத்தார். "கலகக்காரர்களுடன் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினால் பலன் கிடைக்கும் என்று நினைத்தேன். 

நடக்கவில்லை. எனவே இன்று முதல் "சாகும் வரை உண்ணாவிரதம்" தொடங்குகிறேன். கலவரம் அடங்கினால் தவிர உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டேன் என்று அறிவித்துவிட்டு, உண்ணாவிரதம் தொடங்கினார். இந்த உண்ணாவிரதம் அனைவரையும் உலுக்கியது. முஸ்லிம்களும் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் அவரிடம் சென்று, இனி அமைதிக்குப் பாடுபடுவதாகக் தெரிவித்தனர். 

கல்கத்தாவின் வடக்குப்பகுதியில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகள் உள்பட 500 பேர், தங்கள் பணிகளைச் செய்தபடி காந்திக்கு ஆதரவாக அனுதாப உண்ணாவிரதம் இருந்தனர். கலவரங்களுக்குக் காரணமானவர்கள், கூட்டம் கூட்டமாகச் சென்று, "இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம்" என்று காந்தி முன்னிலையில் சபதம் செய்தனர். 

உண்ணாவிரதம் தொடங்கிய 4-வது நாள் (செப்டம்பர் 4) அதிகாரிகள் காந்தியை சந்தித்து "கல்கத்தாவில் அமைதி திரும்பியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் வன்முறை சம்பவம் எதுவும் நிகழவில்லை" என்று தெரிவித்தார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பிரதிநிதிகள் காந்தியைச் சந்தித்து, "அமைதி காப்போம்" என்று உறுதிமொழி எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். 

அதைத்தொடர்ந்து,உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தார். காந்தி, செப்டம்பர் 4-ந்தேதி இரவு 9.15 மணிக்கு, அன்றைய வங்காள முதல்-அமைச்சர் எச்.எஸ்.சுஹ்ரவர்த்தி கொடுத்த ஆரஞ்சுப்பழச்சாற்றை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அதன் பிறகு, கல்கத்தா நகரில் கலவரம் ஏதும் நடக்கவில்லை. 

அமைதியை நிலைநாட்ட காந்தி ஆற்றிய அரும்பணியை, கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு வானொலியில் பேசியபோது பாராட்டினார். "50 ஆயிரம் படை வீரர்களாலும் அடக்க முடியாத கலவரத்தை காந்தி தன்னந்தனியாய் அடக்கி அமைதிப்படுத்தினார்" என்று புகழாரம் சூட்டினார். கல்கத்தாவிலிருந்து செப்டம்பர் 7-ந்தேதி காந்தி டெல்லிக்குத் திரும்பினார். 

கலவரம் அதிகமாக நடந்து கொண்டிருந்த பஞ்சாப் மாநிலத்துக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லியிலேயே கலவரங்கள் நடப்பதை அறிந்து கவலை அடைந்தார். எனவே, மீண்டும், "சாகும் வரை உண்ணாவிரதம்" இருக்கப்போவதாக அறிவித்தார். 

இம்முறை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தபோது, டாக்டர்களையோ, நேரு, படேல் முதலிய தலைவர்களையோ அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. 1948 ஜனவரி 14-ந்தேதி காந்தி உண்ணாவிரதம் தொடங்கினார். வாழ்நாளில் மகாத்மா காந்தி கடைசியாக இருந்த உண்ணாவிரதம் இதுதான். 

உண்ணாவிரதம் இருந்தபோது காந்திக்கு வயது 78. உண்ணாவிரதம் தொடங்கிய மூன்றாம் நாள், அவர் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், "உண்ணாவிரதத்துக்குப் பிறகு காந்தி பிழைத்தாலும், அவர் உடல் நலம் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம். சிறுநீரகங்களில் கோளாறு ஏற்படலாம்" என்று எச்சரித்தனர். 

ஆனாலும் காந்தி எதற்கும் கலங்காமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் 4-வது நாள் ஒரு கட்டிலில் சாய்ந்தபடி ஒலிபெருக்கி மூலம் மக்களிடையே பேசினார். "என் மரணம் குறித்தோ அல்லது உண்ணாவிரதத்துக்குப்பிறகு ஏற்படக்கூடிய உடல் ஊனம் பற்றியோ நான் அஞ்சவில்லை.

டாக்டர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையாவது, மக்களை ஒன்றுபடுத்தி அமைதியை நிலைநாட்ட உதவும் என்று நம்புகிறேன்" என்றார் காந்தி. உண்ணாவிரதத்தின் ஐந்தாம் நாள் காந்தியைச் சென்று பார்த்தார்நேரு. காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமாகியிருந்தது. நேருவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. 

உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தந்திகள் காந்திக்கு வந்து குவிந்தன. பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் தந்திகள் அனுப்பியிருந்தனர். அமைதி காப்பதாக, எல்லா மதத்தினரும் காந்தியிடம் சென்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் அறிக்கை விடுத்தார். 

அதன்படி ஜனவரி 18-ந்தேதி ராஜேந்திரபிரசாத்தின் இல்லத்திலிருந்து அனைத்து மதங்களையும் சேர்ந்த 100 தலைவர்கள், காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்குச் சென்றனர். நேருவும், அபுல்கலாம் ஆசாத்தும் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். மத நல்லிணக்கத்தை காப்பதாக, காந்திஜி முன்னிலையில் அனைத்து மதத்தலைவர்களும் உறுதி கூறி, கையெழுத்திட்டனர். 

அங்கு வந்திருந்த பாகிஸ்தான் தூதரும் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வ தாகக் காந்தி அறிவித்தார். அபுல்கலாம் ஆசாத் கொடுத்த ஆரஞ்சுப் பழரசத்தைப் பருகி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதன் பிறகு அமைதி திரும்பும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. 

காந்தியின் மரணம்

தினமும் மாலை அங்குள்ள மைதானத்திற்குச் சென்று பிரார்த்தனைக்கூடத்தில் பேசுவது வழக்கம். கடைசியாக உண்ணாவிரதம் இருந்தபின், அவர் உடல் மிகவும் சோர்வடைந்திருந்தது என்றாலும் மாலையில் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லத் தவறுவதில்லை. 1948 ஜனவரி 30-ந்தேதி வெள்ளிக்கிழமை, வழக்கம்போல அதிகாலை 3.30 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்தார், காந்தியடிகள். 

சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். எலுமிச்சை ரசமும், தேனும் கலந்த வெந்நீர் பருகினார். பின்னர் தன் அறைக்குள்ளேயே சிறிது நேரம் உலாவினார். 8 மணிக்கு தன் உதவியாளர் பியாரிலாலை அழைத்து, காங்கிரஸ் கட்சியின் விதிகளில், தான் செய்ய உத்தேசித்திருந்த மாறுதல் களைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச்சொன்னார். 

பிறகு பத்திரிகைகள் படித்தார். இந்தக் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் (பழைய சென்னை மாகாணம்) கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. அதுபற்றி பியாரிலாலிடம் பேசினார். "தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றையும், பலவிதமான கிழங்குகளையும் தமிழ்நாட்டுக்கு இயற்கை வழங்கியிருக்கிறது. 

அப்படியிருக்க அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் இருக்காது" என்றார். உணவுப்பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி குறிப்பு தயாரிக்கும்படி தன் செயலாளரிடம் கூறி விட்டுக் குளிக்கச் சென்றார். 

குளித்துவிட்டு வந்தபின், 9.30 மணிக்கு வங்காளி மொழிப் பாடங்களை கற்கலானார். உணவு பின்னர் காலை உணவாக 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், பச்சை முள்ளங்கி, தக்காளிப் பழப் பச்சடி, ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச் சாறு ஆகியவற்றை அருந்தினார். பியாரிலால், காங்கிரஸ் விதிகளில் மாற்றம் செய்வது பற்றி தன் கருத்துக்களை எழுதிக் கொடுத்தார். 

அதைக் காந்திஜி ஆழ்ந்து பரிசீலனை செய்தார். பிறகு படுத்துத் தூங்கினார். பகல் 12 மணிக்கு எழுந்து, தேன் கலந்த வெந்நீர் குடித்தார். டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பேட்டி அளித்தார். தனக்கு வந்திருந்த கடிதங்களைப்படித்துப் பதில் எழுதினார். பிற்பகல் 2.15 மணிக்கு காந்தி வழக்கம்போல பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். 

இலங்கை பிப்ரவரி 14-ந்தேதி சுதந்திரம் பெறுவதால், சுதந்திர தினச்செய்தி வாங்கிச் செல்வதற்காக இலங்கையிலிருந்து டாக்டர் டி.சில்வா வந்திருந்தார். உடன் வந்திருந்த அவருடைய மகள், காந்தியிடம் கையெழுத்து வாங்கினாள். மகாத்மா போட்ட கடைசிக் கையெழுத்து இதுதான். மாலை 4 மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார். 

அவரும், காந்தியும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பட்டேலுடன் அவர் மகள் மணிபென் பட்டேலும் இருந்தார். 4.30 மணிக்கு பேத்தி ஆபா காந்தி, மாலை உணவைக் கொண்டு போய்க்கொடுத்தார். 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், 12 அவுன்ஸ் காய்கறி சூப், ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை காந்திஜி அருந்தினார். 

மாலை 5 மணி, வழக்கமாக பிரார்த்தனைக் கூட்டத்தில் இருக்க வேண்டிய நேரம். பட்டேல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கும், நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்து வந்தது. காந்திஜி அவ்வப்போது தலையிட்டுச் சமாதானப்படுத்தி வந்தார். பட்டேல் ராஜினாமாச் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். 

அவரைக் காந்தி சமாதானப்படுத்தினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகிய இருவருடைய தோள்களில் சாய்ந்தபடி நடந்து சென்றார். ஆபா காந்தியுடன் அவர் நகைச்சுவையாக பேசியபடி சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். 10 நிமிடம் தாமதமாகி விட்டதால் காந்தி சற்று வேகமாக நடந்தார். 

கூடியிருந்தவர்களில் பலர் எழுந்து நின்று, வழி விட்டபடி வணங்கினர். காந்தியும் பதிலுக்குக் கை கூப்பி வணங்கினார். திடீரென்று ஒரு இளைஞன், இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கியபடி வந்தான். அவன் காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலில் விழுவதை காந்தி விரும்புவதில்லை. 

எனவே மனு காந்தி, "வேண்டாம். பாபு விரும்பமாட்டார்" என்று தடுத்தார். அந்த இளைஞன், மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டான். மனுவின் கையிலிருந்த காந்தியடிகளின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக, மனு காந்தி கீழே குனிந்தார். 

கண் மூடிக்கண் திறப்பதற்குள் அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காந்திஜிக்கு எதிரே இரண்டு அடி தூரத்திலிருந்து மூன்று முறை சுட்டான். மூன்று குண்டுகளும் காந்தியின் மார்பில் பாய்ந்தன. அவற்றில் இரண்டு குண்டுகள் உடலை ஊடுருவிச்சென்று விட்டன. ஒரு குண்டு, இதயத்துக்கு உள்ளேயே இருந்து விட்டது. 

முதல் குண்டு பாய்ந்ததும், காந்திஜியின் கால் தடுமாறியது. வணங்கியபடியிருந்த கைகள், கீழே சரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும், அவருடைய உடையில் ரத்தக்கறை படிந்தது. அவர் "ஹே... ராம்" என்று இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும், தரையில் ஈர மண்ணிலும், புல் தரையிலும் விழுந்தார்.  

அப்போது மணி 5.17. காந்தியின் உடலை, பிர்லா மாளிகைக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து வல்லபாய் பட்டேல் விரைந்து வந்தார். காந்தியின் நாடியைத் தொட்டுப் பார்த்தார். இலேசாக நாடி துடிப்பது போலத்தோன்றியது. இதற்குள் டாக்டர் டி.பி.பார்க்கவா வந்து சேர்ந்தார். அவர் பரிசோதித்து விட்டு "காந்திஜி உயிர் பிரிந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன" என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, காந்தியடிகளை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர். அவன் தப்பி ஓட எவ்வித முயற்சியும் செய்யவில்லை. துப்பாக்கியுடன் நின்ற அவனை, கூட்டத்தினர் ஆவேசத்துடன் தாக்கினர். அந்த தாக்குதல் நீடித்திருந்தால், கொலையாளி கொல்லப்பட்டிருக்கலாம். 

போலீசார் தலையிட்டு அவனை மீட்டு, துப்பாக்கியை கைப்பற்றினர். கொலையாளி பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் நாதுராம் விநாயக் கோட்சே என்றும், 37 வயதான அவன் புனா நகரை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. 

தனுஷ்கோடியை விழுங்கிய புயல்


தமிழ்நாட்டில் பல்வேறு சமயங்களில் பெரும் புயல் வீசியிருக்கிறது. எனினும், 1964 டிசம்பரில் வீசிய புயல், வரலாறு கண்டறியாத அளவுக்கு பயங்கரமாக இருந்தது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது. புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது.
தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின. திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள, தனுஷ்கோடிக்குள் புகுந்தது. அந்த சமயத்தில், தனுஷ்கோடி ரெயில் நிலையத்திலும், சுங்க இலாகா பரிசோதனை நடைபெறும் இடத்திலும் சுமார் ஆயிரம் பேர்கள் இருந்தனர். அவர்களில் 500 பேர் செத்திருக்கவேண்டும் என்று முதலில் வந்த தகவல்கள் கூறின.
ஆனால், தனுஷ்கோடி அடியோடு அழிந்து, கடலில் மூழ்கி விட்டதால், சாவு எண்ணிக்கை 1,000-க்கு மேல் இருக்கும் என்று பின்னர் மதிப்பிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும்.
இந்த அதிசயப் பாலம், பலத்த சேதம் அடைந்தது. புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது. தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கியபோது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர்.
அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர். கடலில் மூழ்கிய ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது.
அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன. தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.
இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை. கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள், மணல் திட்டுகளில் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
புயல்-மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது. உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது. விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன. உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்.
"சாரதா" என்ற கப்பல், தனுஷ்கோடிக்குச் சென்று 135 பேர்களை காப்பாற்றியது. அவர்கள், மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கரையில் இறக்கி விடப்பட்டனர். தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு 4 நாட்கள் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும், பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன.
புயல்-கடல் கொந்தளிப்பால் சேதம் அடைந்த பாம்பன் பாலம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதை, 1914-ம் ஆண்டில், தென் இந்திய ரெயில்வே தலைமை என்ஜினீயராக இருந்த ஒசன்சே என்ற வெள்ளைக்காரர் அமைத்தார். இந்தப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம்தான் ராமேசுவரத்துக்கு போகவேண்டி இருந்தது.
இந்தப்பாலம் 6,700 அடி நீளம் கொண்டது. இதை அமைக்க 2,600 டன் இரும்பு செலவாயிற்று. கட்டி முடிக்க 1 ஆண்டு பிடித்தது. முன் காலத்தில், ராமேசுவரம் தனித்தீவாக இருக்கவில்லை. தமிழ்நாட்டுடன் சேர்ந்தே இருந்தது. 1573-ம் ஆண்டில் பெரும் புயல் அடித்து, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அப்போது ராமேசுவரம் பகுதி துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறிவிட்டது. அதன்பின், பாம்பன் பாலம் கட்டப்படுகிறவரை, படகு மூலமாகவே மக்கள் ராமேசுவரம் போய் வந்தார்கள். தனுஷ்கோடிக்கு நேரில் சென்ற "தினத்தந்தி" நிருபர் தெரிவித்த தகவல் வருமாறு:-
"நானும், என் நண்பர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றோம். பல இடங்களில் நீந்திச் சென்றோம். கடலில் மூழ்கிய ரெயிலில் 300 பேர் இருந்ததாக தெரியவருகிறது. அவ்வளவு பேரும் பலியாகிவிட்டார்கள். என்ஜினுக்கு கீழே டிரைவரின் பிணம் கிடந்தது. கடலில் பிணங்கள் மிதக்கின்றன.
நாங்கள் 50 பிணங்கள் வரை எண்ணினோம். பிணங்களை கழுகுகள் கொத்தித்தின்ற கோரக்காட்சியைக் கண்டு மனம் பதறியது. எங்கு போனாலும் பிண நாற்றம் தாங்க முடியவில்லை. தனுஷ்கோடியில் வசித்த சுமார் 2 ஆயிரம் பேரில், பாதிக்கு மேற்பட்டவர்கள்
பலியாகிவிட்டார்கள். உயிர் தப்பியவர்கள் கதறி அழுவதைப் பார்க்கும்போது, நெஞ்சம் உருகுகிறது. சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். பலர் குடும்பத்தோடு ராமேசுவரத்தை நோக்கி நடந்து செல்கிறார்கள்.
ராமேசுவரம் தெருக்களில் உடைந்த படகுகள் கிடக்கின்றன. மழையில் உடைமைகள் அனைத்தையும் இழந்த ஒருவர், கட்டிக்கொள்ள வேட்டி இல்லாமல், இறந்து போன தன் மனைவியின் சேலையால் உடம்பை மூடி மறைத்துக்கொண்டு அழுத காட்சி கல் மனதையும் கரையச் செய்வதாய் இருந்தது."
இவ்வாறு நிருபரின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறந்தவர்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 100 பெயர்கள் அடங்கியிருந்தன. அடையாளம் தெரியாத, அழுகிப்போன பிணங்களை பெரிய குழிகளைத் தோண்டி புதைத்தார்கள். 28-ந்தேதி வரை 150 பிணங்கள் புதைக்கப்பட்டன.
தனுஷ்கோடியை புயல் தாக்கிய அதே நேரத்தில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரப்புயல் வீசியது. (இந்தப் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.) தலைமன்னார் பகுதியில் 1,500 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர்களில் பலருடைய பிணங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கரை ஓரப்பகுதிகளில் ஒதுங்கிக் கிடப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. தனுஷ்கோடியில் கடும் புயல் வீசி, கடல் கொந்தளிப்பில் நூற்றுக்கணக்கான பேர் பலியான செய்தி அறிந்து, இங்கிலாந்து ராணி எலிசபெத் துயரம் அடைந்தார்.
ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு அனுதாப செய்தி அனுப்பினார். புயல் வீசிய நேரத்தில் நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் ராமேசுவரத்துக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர். சாவித்திரியும், ஜெமினிகணேசனும் அதிசயமாக உயிர் தப்பிய தகவல், மறுநாள்தான் தெரிய வந்தது.