தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2013

அரியலூர் ரயில் விபத்து 250 பேர் பலி

தமிழ்நாட்டில் நடைபெற்ற ரெயில் விபத்துகளில், அரியலூர் ரெயில் விபத்து மிகவும் பயங்கரமானதாகும். அதில், 250 பேர் பலியானார்கள். விபத்துக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று அன்றைய ரெயில் மந்திரி லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். திருச்சியில் இருந்து 35 மைல் தூரத்தில் அரியலூருக்கும், கல்லகம் என்ற ரெயில் நிலையத்துக்கும் இடையே "மருதையாறு" என்ற காட்டாறு ஓடுகிறது.  

இதன் மீது ரெயில்வே பாலம் இருக்கிறது. அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த திடீர் வெள்ளத்தின் காரணமாக ரெயில் பாலத்தை சுற்றிலும் அரிப்பு ஏற்பட்டது. தண்ணீர் ஓடுவதால் அது வெளியே தெரியவில்லை. 

23-11-1956 நள்ளிரவில் பல ரெயில்கள் அந்த பாலத்தின் வழியாக சென்றன. அதிகாலை 5-30 மணி இருக்கும். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. "தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்" ரெயில் பாலத்தின் மீது சென்றது. அந்த நேரத்தில் பாலம் திடீரென்று இடிந்தது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரெயில் என்ஜின் மற்றும் 7 பெட்டிகளும் ஆற்றுக்குள் கவிழ்ந்து வெள்ளத்தில் மூழ்கின. 

இந்த பெட்டிகளில் நான்கு பெட்டிகள் 3-ம் வகுப்பு பயணிகள் சென்றது. (இதில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது) 2 பெட்டிகள் 2-ம் வகுப்பு பயணிகளுக்குரியது. ஒரு பெட்டி பார்சல் வண்டியாகும். பெட்டிக்கள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார்கள். 

விபத்தில் பலியான பெண்கள், கைக்குழந்தைகளின் உடல்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அந்த ஆறு ரத்த ஆறு போல பயங்கரமாக காட்சி அளித்தது. இந்த ரெயில் விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் எம்.ஜி.துரைசாமி, பயர்மேன்கள் முனுசாமி, கோதண்டன், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல பாட்டுக்காரியான சாவித்திரி (கணேசன்) உள்பட 250 பேர் பலியானார்கள். 

ரெயில் கார்டுகள் வைத்தியநாதசாமி, ஆறுமுகம் இருவரும் உயிர் தப்பினார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஆற்றங்கரையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டது. அடையாளம் காணமுடியாத 60 உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. அரியலூர் விபத்து பற்றி கேள்விப்பட்டதும் கவர்னர் ஸ்ரீபிரகாசா கண்ணீர் விட்டார். 

டெல்லியில் மத்திய ரெயில்வே உதவி மந்திரியாக தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓவி.அளகேசன் பதவி வகித்தார். விபத்து செய்தி கிடைத்தவுடன் அளகேசன் அரியலூர் வந்தார். ஆற்றில் ரெயில் கவிழ்ந்து கிடந்ததையும், ரத்த வெள்ளத்தில் பிணங்கள் கிடந்ததையும் பார்த்தார். ஆற்றங் கரையில் குவியல் குவியலாக பிணங்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அளகேசன் கண்ணீர் விட்டார். 

அங்கேயே அவர் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். இரவு வெகு நேரம் வரையில் நின்றிருந்து பிணங்கள் மீட்கப்படுவதை பார்வையிட்டார். சென்னைக்கு திரும்பிய அளகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

இதுபோன்ற பயங்கர விபத்தை நான் பார்த்ததே இல்லை. விபத்து சேதங்களையும், பிணக்குவியல்களையும் பார்த்து நிலைதடுமாறி அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ரெயில் கவிழ்ந்த ஆற்றுப்பாலம் நன்றாகத்தான் இருந்தது. பேய் மழையின் காரணமாக பாலத்தின் முகப்பில் மண் அரிக்கப்பட்டதால் தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் ரெயில் ஆற்றுக்குள் விழுந்து விட்டது. 

இவ்வாறு அவர் கூறினார். 

மத்திய மந்திரிகள் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரும் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்த்தார்கள். பெண்கள் பயணம் செய்த ரெயில் பெட்டி மண்ணோடு மண்ணாக சகதியில் புதைந்து போனது. அதற்குள் கிடந்த பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசியது. இதனால் பிணங்களை மீட்க முடியவில்லை. 

அந்த பெட்டியை கரையில் எடுத்துப் போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள். ரெயில்வே மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்து வந்தார். தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆற்றுக்குள் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதால் அதற்கு பொறுப்பு ஏற்று லால்பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். லால்பகதூர் சாஸ்திரியின் ராஜினாமாவை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பிரதமர் நேரு சொன்னதாவது:- 

ஐதராபாத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்ய லால் பகதூர் சாஸ்திரி முன்வந்தார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இப்போது "தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்" கவிழ்ந்ததும் மறுபடி ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார். 

"இந்த விபத்துக்கு நானே பொறுப்பு" என்று மந்திரி அவருடைய ராஜினாமா கடிதத்தில் சொல்லியிருக்கிறார். இந்த கடிதம் கிடைத்தவுடன் நான் அவருடன் விரிவாக மனம் விட்டுப்பேசினேன். இந்த தடவை ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதே சரி என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். 

அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதால் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விபத்துக்கு லால்பகதூர் சாஸ்திரியே காரணம் என்று அர்த்தம் இல்லை. ஆனால் இந்த மாதிரி ராஜினாமா செய்வதுதான் முறை என்பதை எடுத்துக்காட்டவே இதற்கு நாம் சம்மதம் கொடுத்தேன். என்ன ஏற்பட்டாலும் சரி, கொஞ்சம் கூட கவலைப்படாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்ற நினைப்பு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. இதை முன்னிட்டே ரெயில்வே மந்திரியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்." 

இவ்வாறு நேரு கூறினார். 

லால்பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு பின்னணி இருந்தது. அரியலூர் ரெயில் விபத்து ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஒரு ரெயில் ஆற்றில் விழுந்து 126 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளத்தினால் பாலம் சேதம் அடைந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

"மழைக்காலத்தில் ரெயில்வே பாலத்துக்கு ஆபத்து ஏற்படாத வகையில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாலங்கள் சரிவர ரிப்பேர் செய்யப்படும்" என்று லால்பகதூர் சாஸ்திரி உறுதி அளித்து இருந்தார். ஆனால் சில மாதத்துக்குள்ளாக ஐதராபாத் விபத்து போலவே தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் விபத்து ஏற்பட்டது.

இதனால் மந்திரி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். முன்பு கொடுத்த வாக்குறுதி பொய்யாகிவிட்டதே என்று கவலைப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி விபத்துக்கு பொறுப்பு ஏற்பதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். 

பீகார் மாநிலத்தில் 6-6-1981 அன்று ரெயில் ஆற்றுக்குள் விழுந்ததில் 2 ஆயிரம் பேர் உயிர் இழந்தார்கள். விபத்துக்கு உள்ளான அந்த பாசஞ்சர் ரெயில், சமஸ்திபூரில் இருந்து பான்மங்கி என்ற இடத்துக்கு போய்க்கொண்டு இருந்தது. அந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. 

எல்லா பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூரை மீதும் பலர் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர். தமரகாட் என்ற இடத்தில் கோசி ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது "தட தட" என்று 7 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. என்ஜினும், அதற்கு அடுத்த பெட்டியும் மட்டுமே ஆற்றுக்குள் விழாமல் தப்பின. 

ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டு இருந்ததால் 5 பெட்டிகள் அடியோடு மூழ்கின. இந்த ரெயில் விபத்தில் 200 பேர் பலியானதாகவும், பின்னர் அது 800 பேர் என்றும் கூறப்பட்டது. ரெயில் விபத்தில் செத்தவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் விபத்து நடந்தபோது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. 

அதனால் 5 பெட்டிகளை வெள்ளம் அடித்துச்சென்று விட்டது. 2 பெட்டிகள் மட்டும் வெள்ளத்துக்குள் மூழ்கி கிடந்தது தெரிந்தது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது சாவு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கலாம் என்று பீகார் சட்டசபை துணை சபாநாயகர் கஜேந்திரபிரசாத் கிமான்ஷு தெரிவித்தார்.

 சாவு எண்ணிக்கை 3 ஆயிரம் இருக்கும் என்று பீகார் கிராமப்புற வளர்ச்சி மந்திரி சவுத்ரி சலாடீனும் தெரிவித்தார். பீகார் ரெயில் விபத்துதான் உலகிலேயே மிகப்பயங்கரமான பெரிய விபத்தாகும். கடந்த 1917 டிசம்பர் 10-ந்தேதி பிரான்சு நாட்டில் ராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ரெயில் விபத்தில் சிக்கி 543 பேர் இறந்ததுதான், இதுவரை உலகிலேயே பெரிய ரெயில் விபத்தாக கருதப்பட்டு வந்தது. பீகார் ரெயில் விபத்து அதையும் மிஞ்சி விட்டது.

திபெத்தை சீனா கைப்பற்றியது: தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்

திபெத்தை சீனா கைப்பற்றியது: தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம்
பெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் அதிபராக இருந்த தலாய் லாமா இந்தியாவுக்கு ஓடிவந்தார். அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இந்தியாவின் வட எல்லையில் உள்ள திபெத், 1959-ம் ஆண்டுவரை தனி சுதந்திர நாடாக இருந்து வந்தது. புத்த மதத்தலைவரான தலாய் லாமா, நாட்டின் அதிபராகவும் இருந்து வந்தார். 

(ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமா வாகத் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். இந்த கிளர்ச்சி, பிறகு புரட்சியாக மாறியது. புரட்சியை அடக்கும்படி ராணுவத்துக்கு சீன அரசாங்கம் உத்தர விட்டது. ராணுவத்தின் அடக்குமுறையை தாங்க முடியாமல், திபெத்திய மக்கள் குடும்பம், குடும்பமாக வெளியேறத் தொடங்கினார்கள். 

தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தற்போதைய தலாய் லாமா, 1935-ம் ஆண்டு பிறந்தவர். திபெத் நாட்டின் 14-வது தலாய் லாமா.) திபெத் தனி நாடு என்றாலும், சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கி வந்தது. இந்த நிலையில் 1959-ம் ஆண்டில் திபெத்தை கைப்பற்றிக் கொள்ள சீன அரசாங்கம் முடிவு செய்தது. 

சீன ராணுவம் திபெத்துக்குள் நுழைந்தது. திபெத்தின் தெற்கு எல்லையில் நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு திபெத்தியர்கள் ஓடுவார்கள் என்று சீனா கருதியது. எனவே அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று நேபாளம், பூடான் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நாட்டை விட்டு ஓடும் திபெத்தியர்களை சுட்டுக் கொல்லும்படியும் உத்தரவிடப்பட்டது. 

சீனா ஆக்கிரமிப்பை தொடர்ந்து தலாய் லாமா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அவரைப் பற்றி பல்வேறு யூகங்களுடன் செய்திகள் வெளிவந்தன. தலாய் லாமா ஒரு மலையில் இருந்து விழுந்து விட்டார் என்றும், இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது. 

அதே நேரத்தில் புரட்சிக்காரர்களுடன் தலாய் லாமா தப்பி ஓடிவிட்டார் என்றும், அவர் திபெத்தை விட்டு வெளிநாட்டுக்கு போய் இருக்க முடியாது என்றும் மற்றொரு தகவல் கூறியது. தலாய் லாமா திபெத்தில் உள்ள "லோகா" என்ற பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு இருப்பதாக சீன செய்தி நிறுவனம் அறிவித்தது. 

தலாய் லாமா எங்கிருந்தாலும் பிடித்து விடும்படி சீன படைகளுக்கு சீன அரசு உத்தரவு பிறப்பித்தது. தலாய் லாமாவுக்கு பதிலாக "பஞ்சன் லாமா" என்பவரை திபெத்தின் புதிய நிர்வாகியாக சீன அரசாங்கம் நியமித்தது. இவர் தலாய் லாமாவுக்கு எதிரானவர். சீனாவின் கைப்பொம்மையாக செயல்பட்டு வந்தவர். திபெத்தில் ஏற்பட்டுள்ள ரத்த புரட்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள "லாமா"க்கள் கேட்டுக்கொண்டார்கள். 

அமெரிக்க தலைநகரில் ஊர்வலம் நடத்தி கோஷம் போட்டார்கள். சீன அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. "திபெத்தில் நடந்த புரட்சி இப்போது முழுவதுமாக அடக்கப்பட்டு விட்டது. 4 ஆயிரம் பேர் கைதிகளாக பிடிபட்டுள்ளனர். ஏராளமான போர் ஆயுதங்கள், துப்பாக் கிகள், குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று அறிவித்தது. திபெத் நிலைமை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. 

இந்த விவாதத்தின் போது ஒரு எம்.பி. பேசுகையில், "தலாய் லாமா இந்தியா வந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு பிரதமர் நேரு, "அப்பொழுது இருக்கும் சூழ்நிலைப்படி நடந்து கொள்வோம்" என்று பதில் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

"சீனாவுடன் நட்புடன் இருக்க இந்தியா விரும்புகிறது. எனினும், திபெத் நாட்டில் நடைபெறும் சம்பவங்களை "வெளிநாட்டு விவகாரம்" என்று தள்ளி விடுவதற்கு இல்லை. திபெத் சுதந்திரம் அடைவதை இந்தியா ஆதரிக்கும். இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறு." 

இவ்வாறு நேரு கூறினார். 

திருப்பதி போராட்டம்



`தமிழ்நாடு' உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச்   செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்' இருந்தது. தமிழ்நாட்டின் சில பகுதிகள், திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் அடங்கியிருந்தன. 

சங்க கால இலக்கியங்களில், தமிழ் நாட்டின் வட எல்லை திருவேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் வரை, திருப்பதி மலை வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்து வந்தது. 

ஆனால், தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும் எல்லைச் சிக்கலைத் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர், கங்குந்திக்குப்பம், திருத்தணி, புத்தூர், பல்லவனேரி, காளத்தி, சந்திரகிரி (திருப்பதி) ஆகிய தாலுகாக்களையும், தெலுங்கு பேசப்படும் கர்நூல் மாவட்டத்தில் இருந்து மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் பிரித்து சித்தூர் மாவட்டம் என்ற பெயரில் இரு மொழி மாவட்டத்தை உருவாக்கினார்கள். 

சித்தூர் மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகும், பல ஆண்டுக்காலம் வேலூர்தான் அதன் தலைநகரமாக இருந்தது. திருப்பதி வைணவத்திருத்தலமாக இருந்ததாலும், ஆந்திரர்களுக்கு அதுவே பிரதானக் கோவிலாக விளங்கியதாலும், மெல்ல மெல்ல ஆந்திரர்களின் ஆதிக்கத்திற்குச் சென்று விட்டது. 

இதையெல்லாம் உணர்ந்திருந்த ம.பொ.சி., இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு மறுநாள் (16-8-1947) திருப்பதிக்குத் தொண்டர்படையுடன் சென்று, "திருப்பதி தமிழர்களுக்கே உரியது" என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். "கிராமணியே, திரும்பிப்போ" என்று ஆந்திரர்கள் எதிர்ப் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, "திருப்பதி யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா, ஆந்திரர்களுக்கா?" என்ற விவாதம் எழுந்தது. 

"திருப்பதி தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று ம.பொ.சி. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். "தமிழர்களுக்கு திருப்பதி கிடைக்காது. தமிழர்களிடமிருந்து சென்னையையும் பறிப்போம்" என்றார், ஆந்திரத் தலைவர், என்.ஜி.ரங்கா. அவர் சொன்னது உண்மையாயிற்று. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திரர்கள் கோரினர். 

இதற்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார், ம.பொ.சி. "சென்னை நகரம், தமிழ்நாட்டுக்கே சொந்தம்" என்று சென்னை மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை நகரம் தங்களுக்குக் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட ஆந்திரர்கள், சில காலத்திற்கு தற்காலிகமாக சென்னையைத் தங்கள் தலைநகராக வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். 

அந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரா வுக்கு போய்விடக்கூடிய நிலைமை உருவாயிற்று. அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் போராட்டம் நடத்தினார். மறியல் செய்தவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 

எல்லையை மீட்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று, ம.பொ.சி. அறிவித்திருந்தார். ராஜாஜி விடுத்த வேண்டு கோளின்படி, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. திடீரென்று திருத்தணியில் வாழும் தமிழ் இளைஞர்கள், ஆந்திரர்களைக் கண்டித்து வன்முறையில் இறங்கினர். ஊராட்சி மன்ற கட்டிடத்துக்குள் புகுந்து வானொலிப் பெட்டியை உடைத்தனர். 

ரெயில் நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனால் போலீசார் தடியடி நடத்தினர். வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று ம.பொ.சி. வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து அமைதி திரும்பியது. வடஎல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு முன்வராததால், ஜுலை 2-ந்தேதி திருத்தணிக்கு ம.பொ.சி. சென்றார். தடை உத்தரவை மீறி, மறுநாள் மறியல் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் அவருக்கு 6 வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சுதந்திரப்போரில் 6 முறை சிறை சென்ற ம.பொ.சி., இப்போது 7-வது முறையாக சிறை சென்றார். இதற்கிடையே, பிரதமர் நேருவுடன் அன்றைய முதல்- அமைச்சர் ராஜாஜி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், "சித்தூர் மாவட்டத்தில் தமிழர் கோரும் தாலுகாக்கள் பற்றி விசாரிக்க, விரைவில் எல்லைக் கமிஷன் அமைக்கப்படும். 

இதற்காகப் போராட்டம் அவசியம் இல்லை" என்று நேரு அறிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து 5 நாள் சிறைவாசத்துக்குப்பின் ம.பொ.சி. விடுதலையானார். திருவாங்கூர் - கொச்சி சமஸ்தானத்தில் இணைந்திருந்த தமிழ்ப்பகுதிகளை மீட்க, 1954 ஜுன் மாதத்தில் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நேசமணி தலைமையில் போராட்டம் நடந்து வந்தது. 

இந்தப் போராட்டத்தில் நேச மணி சிறை சென்றார். சிறையிலிருந்த நேச மணி, ம.பொ.சிக்கு தந்தி அனுப்பினார். மூணாறு விரைந்தார், ம.பொ.சி. அவர் முன்னிலையில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. ஆகஸ்ட் 11-ந்தேதி, தென் திருவாங்கூரில் உள்ள கல்குளம் தாலு காவில், நேசமணி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாபெரும் ஊர்வலம் நடந்தது. 

அந்த ஊர்வலத்தைக் கலைக்க மலபார் ரிசர்வ் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர். இதனால் திருவாங்கூர் - கொச்சி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து 1955 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பட்டம் தாணுப்பிள்ளையை முதல்வராகக் கொண்ட பிரஜா சோசலிஸ்டுக் கட்சி மந்திரிசபை கவிழ்ந்தது. 

எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்த பசல் அலி கமிஷன் 1955 இறுதியில் தனது தீர்ப்பை மத்திய அரசிடம் வழங்கியது. திருவாங்கூர் கொச்சியில் உள்ள தமிழ் வழங்கும் தாலுகாக்களான செங்கோட்டை, கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஐந்து தாலுகாக்களை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கமிஷன் தீர்ப்புக் கூறியது. 

75 சதவீதம் தமிழர்கள் வாழும் தேவி குளம் - பீர்மேடு தாலுகாக்களை தமிழகத்துடன் சேர்க்க கமிஷன் மறுத்து விட்டபோதிலும், இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனை தமிழகத்திற்கு கிடைத்தது. தமிழக - ஆந்திர எல்லைப் பிரச்சினையைச் சமரசப் பேச்சு நடத்தித் தீர்த்துக் கொள்வதாக இரு மாநில அரசுகளும் கூறிவிட்டதால், அதுபற்றிப் பசல் அலி கமிஷன் முடிவு எதையும் கூறவில்லை. 

தமிழக - ஆந்திர அரசுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படா விட்டால் மீண்டும் எல்லைக் கமிஷன் அமைக்கவேண்டும் என்று நீதிபதி பசல் அலி குறிப்பிட்டிருந்தார். எல்லைப் பிரச்சினையில் தமிழக - ஆந்திர அரசுகள் இடையே உடன்பாடு ஏற்படாததால் படாஸ்கர் தலைமையில் மீண்டும் கமிஷன் அமைக்கப்பட்டது.

1-4-1960-ல் படாஸ்கர் வழங்கிய தீர்ப்பின்படி, திருத்தணி தாலுகா முழுவதும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. புத்தூர், சித்தூர் தாலுகாக்களில் இருந்து சில கிராமங்கள் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டன.

ஸ்பென்சர் கட்டிடம் தீயில் எரிந்தது.


1981-ம் ஆண்டில், ஸ்பென்சர் கட்டிடம் தீயில் எரிந்தது. சென்னை அண்ணா சாலையில் அமைந்த இந்த ஸ்பென்சர் கட்டிடம் 1855-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அழகிய கட்டிடமாகும். இங்கு மிகப்பெரிய அளவில் கடைகள் (ஷோரூம்) இருந்தன. விலை உயர்ந்த பொருட்கள், துணிமணிகள்,மருந்துகள், மது மற்றும் பலவித பொருட்கள் விற்கும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. 

13-2-1981 அன்று இரவு 7-30 மணி சுமாருக்கு இந்த `ஸ்பென்சர்' கட்டிடத்தில் சரக்கு குடோனில் தீப்பிடித்தது. அது ஒரு மணி நேரத்துக்குள்ளாக எல்லா கடைகளுக்கும் பரவியது. கடைகளில் இருந்த பொருட்கள் வெடித்துச் சிதறின. சென்னை நகரில் இருந்த அனைத்து தீயணைப்பு வண்டிகளிலும் விரைந்து வந்த வீரர்கள் உயிரை பணயம் வைத்து போராடினார்கள்.

அவர்களுக்கு உதவியாக தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்தார்கள். இந்த கட்டிடத்தின் கூரை பர்மா தேக்கு சட்டத்தினால் அமைக்கப்பட்டு அதன் மீது கண்ணாடி போடப்பட்டிருந்தது. தேக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்தபோது கண்ணாடிகள் படார்... படார் என்று வெடித்து சிதறின. தீப்பிழம்புகள் வானத்தை தொடுவது போல எரிந்தன. 

5 மைல் தூரத்துக்கு தீ ஜுவாலை தெரிந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு நள்ளிரவு 12-15 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் ரூ.3 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது. நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதத்துக்கு சொந்தமான கடை ஒன்றும் எரிந்து சாம்பலானது. 

இந்த தீ விபத்தில் வியாபாரி ஒருவர் உயிர் இழந்தார். பலர் காயம் அடைந்தார்கள். இப்போது, ஸ்பென்சர் பிளாசா என்ற பெயரில் புதிய கட்டிடம் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டு, கம்பீரமாகக் காட்சி தருகிறது.