அமெரிக்காவின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அந்த நாடு சுதந்திரம் பெற்றதும் ஜனாதிபதியானார். அயர்லாந்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய டிவேலரா, அந்த நாடு விடுதலை பெற்றதும் ஜனாதிபதி பதவி ஏற்றார். ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து ரஷியாவை மீட்ட லெனின், அந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார்.
இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடு உதயமானபோது, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பாடுபட்ட ஜின்னா, அந்த நாட்டின் கவர்னர் ஜெனரலாக (ஜனாதிபதிக்கு இணையானபதவி) பொறுப்பேற்றார். ஆனால் மகாத்மா காந்தியோ, இந்தியா விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி, கல்கத்தா வீதிகளில் ஒரு எளிய மனிதராக நடமாடிக்கொண்டிருந்தார்! \
அவர் டெல்லியில் தங்காமல் கல்கத்தா சென்றதற்கு முக்கிய காரணம் இருந்தது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், மீண்டும் வகுப்புக் கலவரங்கள் மூண்டிருந்தன. குறிப்பாக கல்கத்தாவில் கலவரம் பயங்கரமாக இருந்தது. இதுவரை சுதந்திரத்துக்காகப் போராடிய காந்தியடிகள், இனி வகுப்புக் கலவரங்களுக்கு முடிவு கட்டி, அமைதியை நிலைநாட்டுவதே தனது முதல் கடமை என்று கருதினார்.
கலவரப்பகுதிகளில் அமைதி யாத்திரை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் கல்கத்தாவுக்குச் செல்ல முடிவு செய்தார். "சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளுங்கள். பிறகு கல்கத்தாவுக்குப் போகலாம்" என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால், காந்தி மறுத்துவிட்டார். "சுதந்திரச் செய்தி" கூட வெளியிடாமல், கல்கத்தாவுக்குச் சென்றார். கலவரப் பகுதிகளில் நடந்து சென்றார். அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்ட் 15-ந்தேதி நாடெங்கும் சுதந்திரத் திருநாள் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. அன்று கல்கத்தாவில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார்;
நூல் நூற்றார்; பிரார்த்தனை நடத்தியபின், கல்கத்தா நகரைச் சுற்றிப் பார்த்தார். அமைதி திரும்பிக்கொண்டிருப்பதையும், இந்துக் களும், முஸ்லிம்களும் நேச முறையில் பழகுவதையும் கண்டு மகிழச்சி அடைந்தார். கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் நண்பர் வீட்டில் காந்தி தங்கியிருந்தார். ஆகஸ்ட் 31-ந்தேதி இரவு, சில இளைஞர்கள் வந்து கதவைத் தட்டினர். காந்தி வெளியே வந்தார்.
கோபத்துடன் நின்றுகொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து, வணக்கம் தெரிவித்தார். கூட்டத்திலிருந்து ஒருவன் காந்தியை நோக்கி ஒரு செங்கல்லை வீசினான். ஆனால் அது குறி தவறி, அருகில் நின்று கொண்டிருந்த காந்தியின் நண்பரைத் தாக்கியது. கூட்டத்திலிருந்த ஒரு வாலிபன், தன் கையிலிருந்த தடியை காந்தியை நோக்கி வீசினான்.
காந்தியின் தலையை நோக்கிப் பறந்த அந்தத்தடி, நூலிழையில் குறி தவறியது. இதற்கிடையே போலீசார் அங்கு வந்து, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் (செப்டம்பர் 1) காந்தி ஒரு அறிக்கை விடுத்தார். "கலகக்காரர்களுடன் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினால் பலன் கிடைக்கும் என்று நினைத்தேன்.
நடக்கவில்லை. எனவே இன்று முதல் "சாகும் வரை உண்ணாவிரதம்" தொடங்குகிறேன். கலவரம் அடங்கினால் தவிர உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டேன் என்று அறிவித்துவிட்டு, உண்ணாவிரதம் தொடங்கினார். இந்த உண்ணாவிரதம் அனைவரையும் உலுக்கியது. முஸ்லிம்களும் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் அவரிடம் சென்று, இனி அமைதிக்குப் பாடுபடுவதாகக் தெரிவித்தனர்.
கல்கத்தாவின் வடக்குப்பகுதியில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகள் உள்பட 500 பேர், தங்கள் பணிகளைச் செய்தபடி காந்திக்கு ஆதரவாக அனுதாப உண்ணாவிரதம் இருந்தனர். கலவரங்களுக்குக் காரணமானவர்கள், கூட்டம் கூட்டமாகச் சென்று, "இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம்" என்று காந்தி முன்னிலையில் சபதம் செய்தனர்.
உண்ணாவிரதம் தொடங்கிய 4-வது நாள் (செப்டம்பர் 4) அதிகாரிகள் காந்தியை சந்தித்து "கல்கத்தாவில் அமைதி திரும்பியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் வன்முறை சம்பவம் எதுவும் நிகழவில்லை" என்று தெரிவித்தார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பிரதிநிதிகள் காந்தியைச் சந்தித்து, "அமைதி காப்போம்" என்று உறுதிமொழி எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து,உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தார். காந்தி, செப்டம்பர் 4-ந்தேதி இரவு 9.15 மணிக்கு, அன்றைய வங்காள முதல்-அமைச்சர் எச்.எஸ்.சுஹ்ரவர்த்தி கொடுத்த ஆரஞ்சுப்பழச்சாற்றை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அதன் பிறகு, கல்கத்தா நகரில் கலவரம் ஏதும் நடக்கவில்லை.
அமைதியை நிலைநாட்ட காந்தி ஆற்றிய அரும்பணியை, கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு வானொலியில் பேசியபோது பாராட்டினார். "50 ஆயிரம் படை வீரர்களாலும் அடக்க முடியாத கலவரத்தை காந்தி தன்னந்தனியாய் அடக்கி அமைதிப்படுத்தினார்" என்று புகழாரம் சூட்டினார். கல்கத்தாவிலிருந்து செப்டம்பர் 7-ந்தேதி காந்தி டெல்லிக்குத் திரும்பினார்.
கலவரம் அதிகமாக நடந்து கொண்டிருந்த பஞ்சாப் மாநிலத்துக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லியிலேயே கலவரங்கள் நடப்பதை அறிந்து கவலை அடைந்தார். எனவே, மீண்டும், "சாகும் வரை உண்ணாவிரதம்" இருக்கப்போவதாக அறிவித்தார்.
இம்முறை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தபோது, டாக்டர்களையோ, நேரு, படேல் முதலிய தலைவர்களையோ அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. 1948 ஜனவரி 14-ந்தேதி காந்தி உண்ணாவிரதம் தொடங்கினார். வாழ்நாளில் மகாத்மா காந்தி கடைசியாக இருந்த உண்ணாவிரதம் இதுதான்.
உண்ணாவிரதம் இருந்தபோது காந்திக்கு வயது 78. உண்ணாவிரதம் தொடங்கிய மூன்றாம் நாள், அவர் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், "உண்ணாவிரதத்துக்குப் பிறகு காந்தி பிழைத்தாலும், அவர் உடல் நலம் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம். சிறுநீரகங்களில் கோளாறு ஏற்படலாம்" என்று எச்சரித்தனர்.
ஆனாலும் காந்தி எதற்கும் கலங்காமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் 4-வது நாள் ஒரு கட்டிலில் சாய்ந்தபடி ஒலிபெருக்கி மூலம் மக்களிடையே பேசினார். "என் மரணம் குறித்தோ அல்லது உண்ணாவிரதத்துக்குப்பிறகு ஏற்படக்கூடிய உடல் ஊனம் பற்றியோ நான் அஞ்சவில்லை.
டாக்டர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையாவது, மக்களை ஒன்றுபடுத்தி அமைதியை நிலைநாட்ட உதவும் என்று நம்புகிறேன்" என்றார் காந்தி. உண்ணாவிரதத்தின் ஐந்தாம் நாள் காந்தியைச் சென்று பார்த்தார்நேரு. காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமாகியிருந்தது. நேருவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தந்திகள் காந்திக்கு வந்து குவிந்தன. பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் தந்திகள் அனுப்பியிருந்தனர். அமைதி காப்பதாக, எல்லா மதத்தினரும் காந்தியிடம் சென்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் அறிக்கை விடுத்தார்.
அதன்படி ஜனவரி 18-ந்தேதி ராஜேந்திரபிரசாத்தின் இல்லத்திலிருந்து அனைத்து மதங்களையும் சேர்ந்த 100 தலைவர்கள், காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்குச் சென்றனர். நேருவும், அபுல்கலாம் ஆசாத்தும் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். மத நல்லிணக்கத்தை காப்பதாக, காந்திஜி முன்னிலையில் அனைத்து மதத்தலைவர்களும் உறுதி கூறி, கையெழுத்திட்டனர்.
அங்கு வந்திருந்த பாகிஸ்தான் தூதரும் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வ தாகக் காந்தி அறிவித்தார். அபுல்கலாம் ஆசாத் கொடுத்த ஆரஞ்சுப் பழரசத்தைப் பருகி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதன் பிறகு அமைதி திரும்பும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக